Recent Posts

5/recent/Trending Tech

"மனித குலத்தின் அழிவு தொடங்கிவிட்டது.." உலகிற்கு ஏற்படும் ஆபத்தை மிக தெளிவாக விளக்கிய AI காட்பாதர்!


சியாட்டில்: செயற்கை நுண்ணறிவு குறித்த ஆய்வுகள் உலகெங்கும் தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும், இந்தளவுக்கு வேகமாக ஆய்வுகளை மேற்கொண்டால் பல சிக்கல்கள் ஏற்படலாம் என வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே ஏஐ மாடல்களால் மனிதக் குலமே அழியும் ஆபத்து இருப்பதாக ஏஐ காட்பாதர்களில் ஒருவரான யோஷுவா பெங்கியோ எச்சரித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் காட்பாதர்களில் ஒருவரான மாண்ட்ரீல் பல்கலைக்கழகப் பேராசிரியர் யோஷுவா பெங்கியோ கருதப்படுகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு ஏஐ குறித்து அவர் நடத்திய ஆய்வுகளே இன்று அந்தத் துறை அதிவேக வளர்ச்சிக்கு அடித்தளமிட்டன.




ஏஐ காட்பாதர்

மிலா என்ற செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரான இவர், சமீபத்தில் தான் லாஜீரோ என்ற ஒரு ஆராய்ச்சி அமைப்பையும் தொடங்கினார். இதன் மூலம் பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு மாடல்களை உருவாக்கும் வழிகளை ஆராய பெங்கியோ திட்டமிட்டுள்ளார்.


சமீபத்தில் இவர் பிரபல அமெரிக்க ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில் ஏஐ குறித்து சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். ஏஐ வளர்ச்சி குறித்து வெளிப்படையாகப் பேசினார். ஏஐ துறை தற்போதைய வேகத்தில் வளர்ந்தால்.. அது மனிதக் குலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் இது ஒரு இருண்ட பாதையை நோக்கி நம்மை இழுத்துச் செல்வதாகவும் அவர் கூறினார்.


மனித குலத்திற்குச் சிக்கல்

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நம்மை விடப் புத்திசாலித்தனமான இயந்திரங்களை உருவாக்குகிறோம். அவை தங்களை முதலில் பாதுகாக்க நினைக்க ஆரம்பித்தால் அது ஆபத்தானது.. இது மனித குலத்திற்கு ஒரு போட்டியை உருவாக்குவது போலாகும். மனிதக் குலமே மொத்தமாக அழிந்து போவது, அல்லது ஜனநாயகத்தை அழிப்பது போன்ற நிகழ்வுகள் நடக்க ஒரு சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்றார்.


2023இல், பெங்கியோ மற்றும் பல நூறு ஏஐ நிபுணர்கள், செயற்கை நுண்ணறிவு குறித்த ஆய்வுக்குத் தடை விதிக்க அழைப்பு விடுத்தனர். பாதுகாப்பு மற்றும் நெறிமுறை விதிகளை வகுக்க நேரம் தேவை என்றும் அதுவரை புதிய ஆய்வுகளுக்கு அவர்கள் தடை கோரியிருந்தனர். இருப்பினும், அவர்கள் எதிர்பார்த்தது போல எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லை. பெரு நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் செயற்கை நுண்ணறிவு மாடல்களை மேம்படுத்தத் தொடர்ச்சியாகப் பெரிய தொகையை முதலீடு செய்து வருகிறார்கள்.

சிக்கல் என்ன

யோஷுவா பெங்கியோ மேலும் கூறுகையில், "பெரும்பாலான ஏஐ மாடல்கள் மனிதர்களைப் போலவே செயல்படப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவை வலிமையடையும் போது ஏமாற்றும் போக்கைக் கற்றுக் கொள்கிறது. மனிதர்கள் பொய் சொல்வார்கள், ஏமாற்றுவார்கள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயல்வார்கள். ஏஐ கூட அதையே செய்யலாம். இதனால் ஏஐ தன்னை உருவாக்கியவர்களை விட தனது சொந்த நலன்களுக்காக முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படும் நிலை உருவாகும்.


மரணம் கூட ஏற்படலாம்

சமீபத்தில் சில சோதனைகள் நடத்தப்பட்டன.. அதில் ஏஐ மாடல்கள் தனது சொந்தப் பாதுகாப்பிற்கும் , மனிதனின் மரணத்தை ஏற்படுத்தும் செயலுக்கும் இடையே ஒரு தேர்வை மேற்கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டது. அப்போது அது தன்னை பாதுகாத்துக் கொள்ள மனிதனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் ஆப்ஷனை தேர்வு செய்துள்ளது. இது கவலை அளிக்கும் ஒரு விஷயம் என்பதை மறுக்க முடியாது" என்று அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments

Comments