சியாட்டில்: கூகுள் நிறுவனம் இப்போது ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் 30,000 டாலர், அதாவது சுமார் ₹26.6 லட்சம் வரை சன்மானம் பெற முடியும்.. என்ன செய்தால் இந்தத் தொகையைப் பெற முடியும்.. இதில் உள்ள கண்டிஷன்கள் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். ஏஐ வேகமாக வளர்ந்து வரும் சூழலில், பல்வேறு நிறுவனங்களும் இதில் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறது. ஏஐ பிரிவில் யூசர்களை கவரப் பல்வேறு நிறுவனங்களும் முயன்று வருகின்றன. இதற்கிடையே கூகுள் நிறுவனம் 30,000 டாலர் (சுமார் ₹26.6 லட்சம்) வரை சன்மானம் வழங்கும் வகையில் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.
கூகுள் ஏஐ
இந்தத் தொகையை வாங்க நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்.. கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறிந்து சொன்னால் போதும்! அப்படிச் சொல்வோருக்குச் சன்மானம் வழங்கப் போவதாகக் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக AI Vulnerability Reward Program (AI VRP) என்ற திட்டத்தைக் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பிழைகளைச் சுட்டிக்காட்டுவோருக்கு பேசிக் சன்மானமாக 20,000 டாலர் (சுமார் ₹17.75 லட்சம்) வழங்கப்படும்.. மிகப் பெரிய பிழை அல்லது சிக்கலான பிழையைக் கண்டுபிடித்துச் சொல்வோருக்குக் கூடுதலாக 10,000 டாலர் (சுமார் ₹8.9 லட்சம்) போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
எப்படி புகாரளிக்க வேண்டும்!
ஜெமினி, கூகுள் தேடல், ஜிமெயில் மற்றும் டிரைவ் உள்ளிட்ட கூகுளின் ஏஐ டூல்கள் பயன்படுத்தப்படும் பிளாட்பார்ம்களில் இது பொருந்தும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கூகுளின் அதிகாரப்பூர்வ Bug Hunters இணையதளம் வழியாகப் பிழைகளைக் கண்டுபிடித்துச் சொல்லலாம். அதேநேரம் ஏஐ டூல்கள் தவறான தகவல்களைச் சொல்வது அல்லது தேவையற்ற தகவல்களைச் சொல்வதை ஒரு புகாராகச் சமர்ப்பிக்க முடியாது என்றும் அதற்குச் சன்மானம் எதுவும் வழங்கப்படாது என்பதையும் கூகுள் தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பாகக் கூகுள் செக்யூரிட்டி மேனேஜர்கள் ஜேசன் பார்சன்ஸ் மற்றும் சாக் பென்னட் ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஏஐ டூல்கள் பொய்யான அல்லது தவறான தகவல்களைத் தருகிறது எனப் புகாரளிப்பது ரிவார்ட் திட்டத்தில் வராது என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளனர். மேலும், என்ன மாதிரியான பிழைகளைக் கண்டுபிடித்துச் சொல்லலாம் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
என்ன புகார்கள்
முதலில் மோசடிகள்.. மறைமுகமான ப்ராம்ப்ட் இன்ஜெக்ஷன்கள் மூலம் ஒரு பயனரின் கணக்கு அல்லது டேட்டா பாதுகாப்பைப் பாதிக்கும் தாக்குதல்களைச் சொல்லலாம். உதாரணமாகக் கூகுள் ஹோம் ஸ்மார்ட் கதவை உரிய பாஸ்வோர்ட் இல்லாமல் ஏமாற்றித் திறக்கச் செய்வது போன்றவற்றைப் புகாரளிக்கலாம். டேட்டா கசிவு குறித்தும் நாம் புகாரளிக்கலாம்.. மின்னஞ்சல்கள், முகவரி அல்லது நிதி விவரங்கள் போன்ற தனிப்பட்ட தரவுகள் கசிய இருக்கும் வாய்ப்பு குறித்துக் கண்டறிந்து புகாரளிக்கலாம். ஃபிஷிங் செயல்பாடு, ஏஐ தனியுரிமை திருட்டு தொடர்பாகவும் புகாரளிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஏஐ பொய்யான தகவல்களைத் தருவது மட்டுமின்றி, காபிரைட் புகார், வெறுப்பு பேச்சு உள்ளிட்டவற்றுக்கும் இதில் இருந்து விலக்கு தரப்பட்டுள்ளது. யாருக்கு எவ்வளவு சன்மானம் ஜெமினி, ஜிமெயில், டிரைவ் ஆகியவற்றில் உள்ள முக்கிய பிழைகளுக்கு 20,000 டாலர் வரை சன்மானம் வழங்கப்படும். AI ஸ்டுடியோ, ஜூல்ஸ், நோட்புக்எல்எம் போன்றவற்றில் கண்டறியப்படும் பிழைகளுக்கு 15,000 டாலர் வரையும், மற்ற டூல்களில் கண்டறியப்படும் பிழைகளுக்கு 10,000 டாலர் வரையும் சன்மானம் வழங்கப்படும். சிறிய பிழைகளைக் கண்டறிவோருக்கு 500 டாலர் சன்மானம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2 ஆண்டுகளில் இதுபோல ஏஐ டூல்களில் பிழைகளைக் கண்டுபிடித்துச் சொல்வோருக்கு 430,000 டாலர் வழங்கி இருப்பதாகக் கூகுள் கூறியுள்ளது.


0 Comments