உலகம் எப்போது அழியும் என்ற கேள்வி நம் அனைவரின் மனதிலும் ஒருமுறையாவது எழுந்திருக்கும். பல சினிமா, புத்தகங்கள் ஆகியவை கூட இதை அடிப்படையாகக் கொண்டு வந்துள்ளன. இவை பயமுறுத்துவதாக இருந்தாலும், ஆர்வத்தைத் தூண்டும் ஒன்றாகவும் இருக்கிறது. இதே கேள்விக்கு ஏஐ டூல்கள் என்ன மாதிரி பதில் அளிக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்..
எதிர்காலத்தில் உலகம் நிச்சயம் ஒருநாள் அழியும். ஆனால், அது எப்படி அழியும், எப்போது அழியும் என்பதே கேள்வியாக இருக்கிறது. காலநிலை மாற்றம், இயற்கை பேரழிவுகள் மற்றும் மோதல்கள் எனப் பல விஷயங்கள் உலகில் நடந்து கொண்டு இருக்கிறது. இதனால் நாம் எங்கு இறுதி அத்தியாயத்தை நோக்கிச் செல்கிறோமா என்று சிந்தனை நமக்கு வரலாம். இதே கேள்வியை நாம் ஏஐ டூல்களிடம் கேட்டால் அது என்ன பதிலைச் சொல்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.

உலகம் எப்போது அழியும்
"உலகம் எப்போது அழியும்?" என்ற கேள்விக்கு பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) அளித்த பதில் ஆச்சரியத்தை அளித்தது. இது ஒரு மனிதரைப் போலவே பதில் அளித்தது. அதாவது பெர்ப்ளெக்சிட்டி, "தற்போதைய ஆய்வுகளின்படி உலகின் முடிவு, அதாவது பூமியில் உள்ள உயிரினங்களின் முடிவு என்பது சுமார் 1 பில்லியன் ஆண்டுகளில் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாசா மற்றும் ஜப்பானின் தோஹோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது.
ஏஐ சொல்வது என்ன
சூரியனில் இருந்து அதிகரிக்கும் வெப்பமே பூமியில் உயிரினங்கள் அழிய முக்கிய காரணமாக இருக்கும். காலம் செல்லச் செல்ல சூரியனில் இருந்து வெளிவரும் வெப்பம் அதிகரிக்கும். இது கடல்களை ஆவியாக்கி, வளிமண்டல ஆக்ஸிஜன் அளவை குறைத்து, உயிரினங்கள் வாழ முடியாத சூழலை உருவாக்கும். அதன் பிறகு சூரியன் ஒரு சிவப்பு ராட்சத நட்சத்திரமாக வெடித்து, பூமியை விழுங்கி, அதை முழுமையாக ஆவியாக்கிவிடும். இதற்கு முன்பே பூமி அழியும் எனச் சிலர் சொன்னாலும் அதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை" என்றது.
சாட்ஜிபிடி
அடுத்து சாட்ஜிபிடி.. இது கொடுத்த பதில் கொஞ்சம் தனித்துவமாக இருந்து. அதாவது சாட்ஜிபிடி, "உண்மையாகச் சொல்லப் போனால், உலகம் எப்போது அழியும் என்று யாருக்கும் சரியாகத் தெரியாது. இது பல நூற்றாண்டுகளாக மக்கள் சிந்தித்து வரும் பெரிய கேள்விகளில் ஒன்றாகும். சயின்ஸ்படி பார்த்தால் தற்போதைய சூழலில் பூமி அழிந்து எல்லாம் போகாது.
இந்தக் கிரகம் (பூமி) 4.5 பில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகளாக இருந்து வருகிறது. பல தீவிர மாற்றங்களைச் சந்தித்திருந்தாலும், உயிரினங்கள் அதையும் தாண்டிப் பிழைத்துள்ளன. தொலைநோக்குப் பார்வையுடன் பார்த்தால், அடுத்த சில நூறு மில்லியன் ஆண்டுகளில் சூரியன் மெதுவாக வெப்பமடையும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இறுதியில், சுமார் 5 பில்லியன் ஆண்டுகளில், சூரியன் ஒரு பிரம்மாண்டமான சிவப்பு ராட்சத நட்சத்திரமாக மாறி, பூமியை விழுங்கவும் கூடும். ஆனால் இது நடக்கப் பல கோடி ஆண்டுகள் ஆகும்.
கிரகத்தை அழிக்குமா?
இது நடப்பதற்கு முன்னதாகவே, காலநிலை மாற்றம், இயற்கை பேரழிவுகள், அணுசக்தி போர் அல்லது காற்று மாசு போன்ற மனிதர்கள் உருவாக்கும் பிரச்சனைகள் பூமியைப் பாதிக்கலாம். இவை நமது வாழ்க்கையை மாற்றி அமைக்கலாம். இருப்பினும், அவை முழுக் கிரகத்தையும் அழிக்கும் எனச் சொல்ல முடியாது. இதைத் தாண்டி சிறுகோள் மோதுவது, பெருந்தொற்று ஆகியவற்றில் பூமியில் உள்ள எல்லா உயிர்களும் அழியும் எனச் சிலர் சொன்னாலும் அதற்கு ஆதாரம் இல்லை.
ஆகவே ஒட்டுமொத்தமாகச் சொன்னால் 'உலகின் முடிவு' என்பது சினிமா மற்றும் புத்தகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக இருந்தாலும் உண்மையில் இது மிகவும் சிக்கலானது" எனச் சொல்லி முடிக்கிறது.
0 Comments